அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Wednesday, December 12, 2012

ஒரு நாள் 1000 ஆண்டுகளுக்கு சமமா? 50000 ஆண்டுகளுக்கு சமமா?

 திருக்குர்ஆனில் முரண்பாடா? பாகம் - 3
- எம்.எம். அக்பர்

இறைவனிடம் ஒரு நாளின் அளவு பூமியிலே 1000 ஆண்டுகளுக்கு சமம் என்று குர்ஆனில் 22:47, 32:5 என்ற வசனங்கள் கூறியிருக்க, ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று 70:4 வசனம் கூறுகிறது. இது தெளிவான முரண்பாடு அல்லவா?

முரண்பாடுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்ட குர்ஆன் வசனங்களை ஆய்வோம்.

(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.  – அல்குர்ஆன் 22:47.   

வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். – அல்குர்ஆன் - 32:5

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். - அல்குர்ஆன் 70:4

இம்மூன்று வசனங்களில் 'நாள்' என்று மொழிபெயர்க்கப்பட்டது, 'யவ்ம்' என்னும் அரபிப்பதமேயாகும். சாதாரணமாக இருபத்தி நான்கு மணிநேரமுள்ள ஒரு நாளையே அரபியில் 'யவ்ம்' என்று கூறுவர். இன்னும் 'யவ்ம்' என்னும் பதத்திற்கு 'கால அளவு', 'காலகட்டம்' என்னும் பொருளும் கொள்வதுண்டு. குர்ஆனில், இத்தகைய பொருளில் 'யவ்ம்' என்னும் பதம் பயன்படுத்தப்பட்டதுண்டு.

'ஸலாமுடன் - சாந்தியுடன் இ(ச்சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள். இது தான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும்' (என்று கூறப்படும்) (அல்குர்ஆன – 50:34) நித்தியமாக தங்கியிருக்கும் நாள் என்றால் சூரியன் உதித்து அஸ்தமிக்கும் இடையிலான கால அளவு இல்லையல்லவா? ஏனென்றால் இது எல்லைக்குள்ளான கால அளவு ஆகும். எந்நிலையிலும்  முடிவுறாத நித்தியமான அழிவில்லாத மறுமையினையே இங்கே (50:34) 'நாள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அதன் உபயோகத்திலிருந்து விளங்குகிறது.

கியாம நாளில் நிகழும் காரியங்களைக் குறித்தும் கூறும் போதும் குர்ஆன் 'நாள்' (யவ்ம்) என்னும் பதத்தையே உபயோகப்படுத்தியுள்ளது.

அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.  - அல்குர்ஆன் - 101:4-5

இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள். - அல்குர்ஆன் - 14:48

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். - அல்குர்ஆன் - 99:6   

ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். - அல்குர்ஆன் - 89:25   


அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். - அல்குர்ஆன் - 88:2-3   

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். - அல்குர்ஆன் - 86:9   

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள். - அல்குர்ஆன் - 83:6   

அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. - அல்குர்ஆன் - 82:19   

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் - தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;, தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். - அல்குர்ஆன் - 80:34-37   

அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். - அல்குர்ஆன் - 79:35

'பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;' - அல்குர்ஆன் - 79:6

ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார். - அல்குர்ஆன் - 78:38   

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவறற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் ''அந்தோ கைசேதமே! நான் மணண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!'' என்று (பிரலாபித்துக்) கூறுவான். - அல்குர்ஆன் - 78:40   

அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. - அல்குர்ஆன் - 78:39   

மேற்காணும் இவ்வசனங்களில் உள்ள ஒவ்வொரு சம்பவங்களுடனுமுள்ள 'நாள்' என்பது அந்த சம்பவங்கள் நடக்கும் கால அளவே என்பது தெளிவாக விளங்கும். ஓவ்வொரு சம்பவங்களின் அடிப்படையில் கால அளவும் மாறுபாடாக இருக்கும். மனிதர்கள் தம் கர்மங்களுக்கு ஏற்ப பல பிரிவுகளாக பிரிந்து நிற்கும் நாள், மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்கள் போலாகும் நாள் போல இருப்பதில்லை.  ஓவ்வொரு நாளின் கால அளவும் வேறுபட்டிருக்கும். அவைகளின் அளவு குறித்து அல்லாஹ் மட்டுமே அறிவான். மனிதர்களாகிய நாம் அதைக் குறித்து அறிய நம்முடைய கையில் எந்த வழியும் இல்லை.

கியாமநாளுடன் தொடர்புடைய இரு சம்பவங்களின் கால அளவை மட்டுமே குர்ஆன் மூலமாக அல்லாஹ் அறிவித்துத் தருகிறான். காரியங்கள் அல்லாஹ்வின் பால் மேலேறிச் செல்லும் ஒரு நாளின் அளவு மனித கணக்குப்படியுள்ள ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமம் என்று 32:5ம் வசனம் மூலமாக அறிவிக்கின்றான். மலக்குகளும் ஆன்மாக்களும் அல்லாஹ்வின் பால் மேலேறிச் செல்லும் நாளின் அளவு மனித கணக்குப்படியுள்ள 5000 ஆண்டுகளுக்குச் சமம் என்று 70:4ம் வசனம் மூலமாக அறிவிக்கிறான்.

இரண்டு வசனங்களிலும் விவரிக்கப்பட்டது கியாம நாளின் போதான இருவேறு சம்பவங்கள் ஆகும். இந்த இரு வேறு சம்பவங்களும் நடைபெற எடுத்துக்கொள்ளும் கால அளவும் வேறு வேறாகும் என்பதை இக்குர்ஆன் வசனங்கள் மூலமாகவே விளங்க முடிகிறது. மற்றபடி இவ்விரண்டுக்கும் மத்தியில் எந்தவொரு முரண்பாடும் இல்லை. இரண்டும் இரு சம்பவங்கள். இரு வேறு சம்பவங்களும் எடுத்துக்கொள்ளும் கால அளவும் இரு வேறு கால அளவாகும் என்றிருக்க இவை எப்படி முரண்பாடாகும்?

அது போல், திருக்குர்ஆனின் 22:47ம் வசனத்தில் '(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்' என்று இறைவன் கூறுகின்றான்.   நிராகரிப்போருக்கு தண்டனை உண்டு என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த போது அதை பரிகாசம் செய்து, நாங்கள் நிராகரித்து ஆண்டுகள் பல ஆகியும் தன்டனை வந்து சேராது ஏனோ? என்னும் கேள்விக்கு இறைவனில் பதிலாகும் இந்த வசனம். இறைவனின் தண்டனை சில காலத்திலேயே வந்தடைய வேண்டும் என்றில்லை. வரலாற்றில் இறைவனின் தண்டனை இறங்குவது மனிதர்களின் கணக்கை அனுசரித்தோ அவன் இஷ்டத்தை அனுசரித்தோ அல்ல. (மாறாக அது) அல்லாஹ்வின் தீர்மானப்படியாகும். அவன் இஷ்டப்படியாகும் என்பதையே இவ்வசனம் எடுத்துக் கூறுகிறது. அல்லாஹ்வின் கணக்குப்படி ஒரு நாள் என்பது மனிதர்களின் கணக்குப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம். ஆதலால் தண்டனையிறங்கவில்லையே என்று பரிகாசம் செய்யவேண்டாம் என்று இவ்வசனம் தெளிவாக்குகிறது. மனித வரலாற்றில் தெய்வீக தலையீடுகளை மனித கணக்குப்படி கணிப்பது கூடாது என்பதே இவ்வசனத்தின் பாடம். இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் மற்ற இரு வசனங்களோடு தொடர்பு இல்லாதது ஆகும். மூன்று வசனங்களும் கூறுவது மூன்று விதமான விஷயங்களாகும். அவைகளின் சம்பவங்களும் வேறுபாடாகும். அதனால் அவைகளுக்கு இடையே எந்தவொரு முரண்பாடும் இல்லை என்பது தெளிவு.

தொடரும் ... இன்ஷா அல்லாஹ்...

0 comments: